Published : 31 May 2023 06:28 AM
Last Updated : 31 May 2023 06:28 AM

விபத்தில் இறந்த பொறியியல் மாணவர் ஹெல்மெட் அணியாததால் இழப்பீடு குறைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விபத்தில் இறந்த பொறியியல் மாணவர், விபத்தின்போது ஹெல்மெட் அணியாததால் இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிஇ படித்து வந்த மாணவர், 2016-ல் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவரின் குடும்பத்தினர் ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி, திண்டுக்கல் மோட்டார் வாகனத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ.24 லட்சத்து 3 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீடு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில் விபத்தில் உயிரிழந்த மாணவரும், இரு சக்கர வாகனத்தில் மோதிய லாரி ஓட்டுநருக்கும் தலா 50 சதவீத பங்கு உண்டு. மாணவரும், ஓட்டுநரும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை. மாணவர் ஹெல்மெட் அணியவில்லை. மாணவரின் மாதச் சம்பளம் தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததற்கு இழப்பீட்டு தொகையில் குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்படவில்லை. எனவே கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: விபத்தில் உயிரிழந்த மாணவரின் மாதச் சம்பளம் சரியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கீழ் நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையில் தலையிட வேண்டியதில்லை. அதே நேரம் விபத்தின்போது மாணவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கான இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது.

இதனால் கீழ் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் குறைக்கப்பட்டு மாணவரின் குடும்பத்துக்கு 8 வாரத்தில் ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 700-யை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகைக்கு 7.5 சதவீத வட்டியும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x