குடியிருப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கும்பல்: திருப்பத்தூரில் மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் மறியல்
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் மது அருந்திவிட்டு பெண்களிடம் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டதை அடுத்து, அங்கு இயங்கும் மதுக்கடையை அகற்ற கோரி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் பிரசித்தி பெற்ற திருத்தளிநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அக்கடையில் மது வாங்குவோர், கோயில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் அமர்ந்து அருந்துகின்றனர். இதனால் பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. இதையடுத்து மதுக்கடையை அகற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்திவிட்டு குடியிருப்பு பகுதியில் இருந்த பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த பெண்கள் அப்பகுதியில் இயங்கும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
