

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே மார்க்கண்டேய நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என எட்ரப்பள்ளி, மாமிடி கும்மனப்பள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஆய்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சிந்தகும்மனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் எட்ரப்பள்ளி, மாமிடிகும்மனப்பள்ளி. இக்கிராமங் களில் 300-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர்.
போக்குவரத்துப் பாதிப்பு: எட்ரப்பள்ளி-மாமிடிகும்மனப் பள்ளி இடையே மார்க்கண் டேயன் நதி செல்கிறது. மழைக் காலங்களில் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும்போது, இவ்விரு கிராமங்களுக்கும் இடையே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மாமிடி கும்மனப் பள்ளியில் வசிக்கும் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இக்கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காகத் தினசரி மார்க்கண்டேய நதியை கடந்து எட்ரப்பள்ளி கிராமத்துக்கு வந்து செல்ல வேண்டும்.
10 கிமீ தூரம் அதிகரிப்பு: மேலும், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பல்வேறு பணிக்குச் செல்வோர் நதியைக் கடந்து சென்றே தங்கள் அன்றாட பணிகளைச் செய்யும் நிலையுள்ளது.மார்க்கண்டேய நதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, 10 கிமீ தூரம் சுற்றியே எட்ரப்பள்ளி செல்ல முடியும். எனவே, நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் சிலர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகா, தமிழக எல்லையோர வனப்பகுதியில் பெய்த மழையால் மார்க்கண்டேய நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், யார்கோள் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் நதியில் தண்ணீர் வரத்து உள்ளது.
பால் வர்த்தகம்: மாமிடிகும்மனப்பள்ளியி லிருந்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தினமும் பாலை எட்ரப்பள்ளிக்கு கொண்டு செல்கின்றனர். இதேபோல, எட்ரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பலரின் விளை நிலங்கள் மாமிடிகும்மனப்பள்ளியில் உள்ளது. இவர்களும் விவசாயப் பணிக்கு நதியைக் கடந்து வரவேண்டிய நிலையுள்ளது. இரு கிராம மக்களுக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மார்க்கண்டேய நதி உள்ளதால், நதியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாத்தியம் இருந்தால்...: இது தொடர்பாக நீர்வளத் துறை அலுவலர்கள் கூறும்போது, எட்ரப்பள்ளி-மாமிடி கும்மனப்பள்ளி போக்குவரத்து வசதிக்காக மார்க்கண்டேய நதியின் இடையே பாலம் கட்ட சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். சாத்தியம் இருந்தால் கருத்துரு தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.