

தமிழகத்தில் அங்கீகாரத்தை இழக்கும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் இளநிலை படிப்புகளுக்கான அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டு உள்ளன.
பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இந்த 3 கல்லூரிகளுக்கு இளநிலை மருத்துவ வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக இந்தக் கல்லூரிகள் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 3 மருத்துவக் கல்லூரிகளிலும் உடனடியாக சம்பந்தப்பட்ட வசதிகளை சரிசெய்ய தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. உடனடியாக இவற்றை சரிசெய்து அது தொடர்பான ஆவணங்களை இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது மிகவும் சிறிய பிரச்சனைதான் என்பதால், ஆவணங்களை சமர்பித்த பிறகு உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழகத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரிசெய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் - அமைச்சர் விளக்கம்: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தேசிய மருத்துவ ஆணையம் தவிர்த்துக் கொள்வது நல்லது” என்று தெரிவித்தார்.
மேலும், சிறிய குறைகளுக்காக அங்கீகராம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறைசொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, “இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திடம் உரிய முறையீடு செய்து, மீண்டும் அங்கீகாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் ஐ.டி அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்குப் பதிவு: கரூரில் வெள்ளிக்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர், அவரது நண்பர்கள் வீடு, நிறுவனங்களில் சோதனை நடத்தவந்த வருமான வரித் துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனர்.
பாஜக அரசியல் கருவியாக வருமான வரித் துறை: முத்தரசன்: திமுகவை அச்சுறுத்த வருமான வரித் துறையை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துவதை கண்டிக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
“வரலாற்றுப் பிழையாக இடம்பெறும் ஆபத்து” - கமல்ஹாசன்: “பிரதமரிடம் நான் முன்வைப்பதெல்லாம் ஒரே ஒரு எளிய கேள்விதான். இந்தத் தேசத்தின் மக்களுக்கு ஒன்றை மட்டும் தெரியப்படுத்துங்கள், ஏன் இந்தியக் குடியரசுத் தலைவர் நமது புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது?” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரம் வரலாற்றுப் பிழையாக இடம்பெறும் ஆபத்து உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“மக்களால்தான் சாதனைகள் சாத்தியமாகின” - பிரதமர் மோடி: "முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையான அரசை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால் எங்களின் சாதனைகள் சாத்தியமாகின. இந்த இணையற்ற ஆதரவு பெரும் பலத்திற்கு ஆதாரமாக உள்ளது" என்று பிதரமர் மோடி தெரிவித்துள்ளாார். 'மோடி அரசின் 9 ஆண்டுகள்' குறித்த பொது மக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து, அவற்றுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: 8 முதல்வர்கள் புறக்கணிப்பு: நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவின் ஒருநாள் கூட்டம் புதுடெல்லி, பிரகதி மைதான அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் சில மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் என்று பாஜக விமர்சித்துள்ளது.
ரூ.150 கோடி வசூலித்து ‘2018’ சாதனை!: மலையாள திரையுலகில் ரூ.150 கோடியை வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது டோவினோ தாமஸின் ‘2018’. படம் வெளியாகி 23 நாட்களைக் கடந்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்: 24 பேர் பதவியேற்பு: கர்நாடக அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகள் நடத்த அனுமதி: தமிழகத்தில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.