வருமான வரித் துறையை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது: முத்தரசன்

முத்தரசன் | கோப்புப் படம்
முத்தரசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: திமுகவை அச்சுறுத்த வருமான வரித் துறையை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துவதை கண்டிக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வருமான வரித் துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். எவர் ஒருவர் மீதும் வரும் புகார்களை சட்ட விதிமுறைகளின் படி விசாரிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டில் முதலீடுகள் திரட்டுவதற்கான அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் அவரது அமைச்சரவை உறுப்பினர் ஒருவரை குறிவைத்து வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்தியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது.

குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை இணைந்தது தான் நாடாளுமன்றம் என அரசியல் அமைப்பு சட்டம் தெளிவுபட வரையறுத்துள்ளது.

ஆனால் குடியரசுத் தலைவரை நிராகரித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் 21 எதிர்கட்சிகள் பங்கேற்க முடியாத நிர்பந்தத்தை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக சமூக நீதி ஜனநாயக கொள்கை அடிப்படையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முனைப்பாக செயல்படும் திமுகவை அச்சுறுத்த வருமான வரித் துறையை பாஜக அரசியல் கருவியாக பயன்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in