

சென்னை: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித் துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், "செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது, அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரில் உள்ள திமுகவினர் தடுத்தனர். மேலும் சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் வாகனத்தை உடைத்து சேதப்படுத்தினர்.
9 இடங்களில் வருமான வரித் துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்றுவிட்டு, பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திரும்பிவந்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்று பொருட்கள் ஆகியவற்றை திமுகவினர் எடுத்துச் சென்றிருக்கலாம்.
இது தொடர்பாகவும், வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியது குறித்தும் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வருமான வரித் துறை அதிகாரிகள் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து மாவட்ட காவல் துறையினரிடம் புகார் அளித்தாலும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர் சார்ந்துள்ள கட்சி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தயக்கம் காட்டலாம். இதனால், விசராணைக்கு ஒத்துழைக்க மாட்டர்கள். எனவே, சிபிஐ விசாரணை அமைப்பு இந்த வழக்கை விசாரிப்பதே சரியானதாக இருக்கும்” என்று அந்த மனுவில் கூறப்படிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதனிடம், ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு அவர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதா என்பது குறித்து விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.