

திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் அரசின் அமுல் நிறுவனம் பால் உற்பத்தியில் முன்னணி வகிப்பதுடன், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து மிகப்பெரும் வருவாய் ஈட்டித் தருகிறது.
ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் 16 சதவீதத்தை மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. மீதமுள்ள பாலை தனியார் நிறுவனத்தினரே கொள்முதல் செய்கின்றனர். ஆவின் நிறுவனத்தைவிட தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக கொள்முதல் செய்வதால், ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் முன்னுரிமை தருவதில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல்செய்ய அனுமதிக்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
அதற்குப் பதிலாக, அமுல் நிறுவனம் போன்று ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமை பால் லிட்டருக்கு ரூ.52 என நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.