

சென்னை: கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடிந்து `கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' எனும் பெயரில் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை இப்பேருந்துமுனையத்தில் இருந்து இயக்கவும், மாநகர பேருந்துகளை அதிகளவில் கிளாம்பாக்கத்துக்கு இயக்குவதற்கான அறிவுறுத்தல்களும் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நேற்று அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா,போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், துணை ஆணையர் நெல்லையப்பன், இணை ஆணையர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனையின்போது, கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படும்போதே ஆம்னி பேருந்து நிலையமும்இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்குஆட்சேபம் தெரிவித்த உரிமையாளர்கள், ``அடிப்படை வசதிகள் செய்து தரும் வரைகோயம்பேட்டில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது'' என வலியுறுத்தினர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், ``தற்போது ஆம்னிபேருந்து நிலையத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், பேருந்து வந்து பயணிகளைஏற்றுவதற்கான இடம் (பஸ் பே) மட்டுமேதயாராக உள்ளது. பேருந்து பராமரிப்புக்கான இடம், அலுவலகம் போன்ற எந்தவிதஅடிப்படை வசதிகளும் இல்லை. இவற்றைஏற்படுத்தித் தர வேண்டும்'' என்றனர்.