Published : 26 May 2023 10:55 AM
Last Updated : 26 May 2023 10:55 AM

பால் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனத்தை காக்க வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதையிலிருந்து ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 1981ம் ஆண்டு முதல் "ஆவின்" என்ற பெயரில் பாலினை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு உரிய விலை வழங்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாலினை தங்கு தடையின்றி வழங்குதல் ஆகியவை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயல்பாட்டினைப் பார்க்கும்போது "அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, பால் மற்றும் அதன் உப பொருட்கள் விநியோகத்தை குறைப்பது, பால் விலையினை அவ்வப்போது உயர்த்துவது, உப பொருட்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் ஆகியவற்றின் விலையினை அடிக்கடி உயர்த்துவது, எடைக் குறைப்பு என பல்வேறு குளறுபடிகளை ஆவின் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.

அண்மைக் காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நான் என்னுடைய அறிக்கைகள் வாயிலாக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால், திமுக அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இன்றுகூட ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்கள் தாராளமாக கிடைப்பதில்லை. ஆவின் வெண்ணெய் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. நுகர்வோர்கள் இதுபோன்ற துன்பங்களை ஒருபுறம் அனுபவித்துக் கொண்டிருக்கையில், பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

பசும் பாலின் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 55 ரூபாயாகவும், எருமைப் பாலின் விலையை லிட்டருக்கு 68 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், தி.மு.க. அரசு இதை செவி கொடுத்துக் கேட்பதாக தெரியவில்லை. மொத்தத்தில், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் என இருவரும் தி.மு.க. ஆட்சியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்தில் தனது வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதோடு, குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவும் பணியையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத அவல நிலை நிலவுவதோடு மட்டுமல்லாமல், பிற மாநில நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் வணிகத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதல்வர், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கடிதம் எழுதுவது காரியத்திற்கு உதவாது. இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல் உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை அளிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு இருக்காது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் குறைந்த விலையில் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதையிலிருந்து ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று முதல்வரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x