

சென்னை: அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்துவிடாமல் தடுக்க, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் அறிக்கை: காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, அதற்காக சுயஉதவிக் குழுக்களை அமுல் உருவாக்கி வருகிறது. ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை விலை வழங்குகிறது. இதனால் ஆவின் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாகக் குறையும். அமுல் நிறுவனத்தின் இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், கொள்முதலிலும், விற்பனையிலும் ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும்.
அமுல் நிறுவனத்திடம் ஆவின் நிறுவனம் ஒரு போதும் வீழ்ந்து விடக்கூடாது. தமிழகத்தின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு வெறும் 16 சதவீதம் மட்டுமே. இதை 50 சத
வீதமாக உயர்த்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமுல் நிறுவனத்தின் அதிரடி நுழைவால், இருக்கும் சந்தைப் பங்கையும் அமுலிடம் ஆவின் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து, தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். எனவே, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42, எருமைப்பாலுக்கு ரூ.51 என்ற விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல் திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் முதல்வர், மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்தாமல், வழக்கமான திசைதிருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்.
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: தனியார் பால் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 வரை அதிகமாக கொடுக்கிறார்கள். அதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு விரும்பி பாலை கொடுப்பதால், ஆவின் நிறுவன பால் கொள்முதல் 10 லட்சம் லிட்டர் வரை குறைந்தது. தற்போது குஜராத்தைச் சேர்ந்த அரசு நிறுவனமான அமுல் பால் நிறுவனமும் தமிழகத்தில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்வதாக செய்திகள் வருகின்றன. பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், ஆவின் பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கும். எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனத்தையும், ஏழை விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.