ஆவின் Vs அமுல் விவகாரம் முதல் புதிய நாடாளுமன்ற விழா சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மே 25, 2023

ஆவின் Vs அமுல் விவகாரம் முதல் புதிய நாடாளுமன்ற விழா சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மே 25, 2023
Updated on
4 min read

பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், "அமுல் நிறுவனத்தின் கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இது நாள் வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழகத்தில் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981 ஆம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது.

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

‘அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்துவிடக் கூடாது’ - அன்புமணி: தமிழகத்தில் ஆவின் கொள்முதல் வீழ்ச்சியைத் தடுக்க கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் தமிழகத்தில் பால் கொள்முதலை தீவிரப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்காக சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறது. ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை விலை வழங்குகிறது. இதனால் ஆவின் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாக குறையும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் வியாழக்கிழமை முதல்வர், சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சை - மத்திய அரசு கோரிக்கை: புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளனர். புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த 200 ஆண்டுகள் இருக்கக் கூடிய நாட்டின் பெருமையான சின்னம் இது. ஜனநாயகத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசக் கூடிய அந்த கோவிலில் அமர்ந்துதான் நாம் மக்களுக்கு தேவையான விஷயங்களை கொண்டு வருகிறோம். அதை புறக்கணிப்பது நல்லது இல்லை. நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் எதிர்கட்சிகளிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் நிலைப்பாடை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்காகவாது அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக, நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கி உள்ளன. மேலும், இந்துத்துவா சித்தாந்தவாதியும் மகாத்மா காந்திக்கு எதிரான கருத்து கொண்டவருமான வி.டி.சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் சில கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல” - குடியரசுத் தலைவர்: ஜார்க்கண்ட் மாநிலம் குந்த்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டார். இம்மாநாட்டில் பேசிய அவர், "பெண்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடாது. பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும். ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல. நமது நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும் எண்ணற்ற உதாரணங்களைக் காணலாம்" என்று கூறியுள்ளார்.

“தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி”- பிரதமர் மோடி: தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை தாயகம் திரும்பிய பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் பேசுகையில், "நான் வெளிநாடுகளில் நம் தேசத்தின் கலாச்சாரம் பற்றிப் பேசும்போது இந்த உலகின் கண்களை உற்று நோக்குகிறேன். இந்த நம்பிக்கை எனக்கு வரக் காரணம் இங்கே அமைந்துள்ள பெரும்பான்மை பலமிக்க ஆட்சி. இந்த உலகம் இப்போதெல்லாம் இந்தியா என்ன சிந்திக்கிறது என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கிறது.

தமிழ் மொழி நம் மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி. உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. அந்த மொழி தந்த திருக்குறளை பப்புவா நியூ கினி நாட்டில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அதை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது" என்றார்.

நாடாளுமன்ற விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும்" என நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘அரசியலமைப்பு உரிமையை ஓர் ஆணின் ஈகோ தடுக்கிறது’: ஓர் ஆணின் ஈகோ மற்றும் சுயவிளம்பரத்திற்கான விருப்பம் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு உரிமையைத் தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரத்தில் அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 'அசோகர் தி கிரேட்', 'அக்பர் தி கிரேட்' வரிசையில் மோடி தி இனா'கிரேட்' என்று வார்த்தை ஜாலம் மூலம் பிரதமர் மோடியை பகடி செய்துள்ளார்.

அரசு நிலங்களின் குத்தகை: சென்னை ஐகோர்ட் புது உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்யவும், குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் ஜெர்மனி: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜெர்மனி எதிர்பாராத பொருளாதார சரிவினை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இப்போது மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், யூரோவுக்கான மதிப்பு சரிவடைந்துள்ளது. ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 0.5 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது அந்நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளியிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in