மந்தநிலையை சந்திக்கும் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி

மந்தநிலையை சந்திக்கும் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி
Updated on
1 min read

பெர்லின்: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜெர்மனி எதிர்பாராத பொருளாதார சரிவினை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இப்போது மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், யூரோவுக்கான மதிப்பு சரிவடைந்துள்ளது.

ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 0.5 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது அந்நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளியிருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்கள் ஜெர்மனி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். அந்நாட்டு அரசு குளிர்கால எரிசக்தி பற்றாக்குறையை முறைப்படுத்த தவறிய நிலையில், ஜனவரி இறுதியில் அதன் வளர்ச்சி விகிதம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணித்திருந்தது. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 சதவீதத்தில் இருந்து 0.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஏப்ரல் மாதத்தில் விலைகள் 7.2 சதவீதம் அதிகரித்த நிலையில், உயர் பணவீக்கம் நுகர்வோர் செலவீனங்களை பாதித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிடிபி என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். ஆனால், செலவினங்களை இது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் பொருளாதாரத்தை மதிப்பிட ஜிடிபி சரியான அளவீடுதான என்று சில வல்லுநர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

கடைசியாக, கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து ஜெர்மனி பொருளாதார மந்தநிலையைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in