

நாமக்கல்: நாமக்கல்லில், அரசு மகளிர் கல்லூரி முதல்வரை பணியிட மாற்றம் செய்யக்கோரி, பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை கல்லூரி வந்த பேராசிரியர்கள் சிலர், கல்லூரியின் நுழைவுப் பகுதியில் அமர்ந்து திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கல்லூரி முதல்வர் பால்கிரேஸை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கூறியதாவது: கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இச்சூழலில் பேராசிரியர்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
எனவே அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நேற்று முன்தினம் மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர் கல்லூரி முதல்வராக நீடித்தால் மாணவியர் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே, அவரை பணியிட மாற்றம் செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும், என்றனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் பால்கிரேஸ் கூறியதாவது: கல்லூரியில், கவுரவ விரிவுரையாளர்கள், காலமுறை ஊதிய விரிவுரையாளர்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அனைவரையும் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்ப பணி செய்ய வேண்டுமென கூறுகிறேன். போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் சிலர் கல்லூரிக்கு தாமதமாக வருபவர்கள்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வாங்கப்படும் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு முறையாக பில் வழங்க மறுக்கின்றனர். இதைக்கேட்டால் என் மீது புகார் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை, என்றார்.