

புதுச்சேரி: புதுச்சேரி, தமிழக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவோடு கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருவதாக புதுச்சேரி அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அங்கிருந்து புதுச்சேரிக்கு எரி சாராயம் கடத்தப்பட்டு, திமுகவை சேர்ந்த சிலரின் துணையோடு போலி மதுபானம் தயாரிக்கபட்டு தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டிலில் சரக்கு ஏற்றப்படுகிறது என அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இது சம்பந்தமாக புதுச்சேரி கலால் துறை மூலம் ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்துவதில்லை. கூலி தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
கலால் துறையின் பாராமுகத்தால் தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடிய மெத்தனால் என்ற ரசாயன எரி சாராயத்தை புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்த அனுமதித்ததால் 22 பேர் வரை மரணமடைந்துள்ளனர். மெழுகுவர்த்தி தயாரிக்கவும், சிரஞ்சி, சானிடைசர், இருமல் மருந்து தயாரிக்க மூலப்பொருளாக இந்த மெத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மூலப்பொருட்கள் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் தற்போது இயக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட மெத்தனாலை அதிக தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச் சாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் புதுச்சேரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஏழுமலை என்பவர் திமுகவை சேர்ந்தவர். திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர். இது போன்ற குற்றச் செயலில் அதிகம் ஈடுபட்டு வருபவர்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த திமுகவினர் தான். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள திமுகவினர் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 22 பேர் இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர். ஆனால் இது தொடர்பாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கள்ள சாராயத்தால் 22 பேர் உயிரிழப்புக்கு காரணமான தமிழக திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்த முன்வருவாரா? புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக் கடை, சாராயக் கடைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் அரசுக்கு எந்த வருமானமும் கிடையாது. அதற்கு பதிலாக மதுபான கடைக்கு அனுமதி கொடுத்து விடலாம்" என்று அன்பழகன் கூறினார்.