

கோவை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை மாநகரில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் செலுத்துவதற்காக ரூ.5 கோடி மதிப்பிலான பழைய நகைகளை மக்கள் விற்பனை செய்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து உயர்கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டணம் செலுத்துவதற்கு போதிய நிதிவசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் பலர் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை விற்பனை செய்து கட்டணத்துக்கான தொகையைப் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது:
தினமும் 100 கிலோவுக்கு மேல் தங்க வணிகம் நடைபெற்று வந்த கோவை மாநகரில் விலை உயர்வால் தற்போது தினமும் 60 முதல் அதிகபட்சமாக 80 கிலோ வரை மட்டுமே தங்க நகை வணிகம் நடைபெறுகிறது. இன்று (நேற்று) ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.46,967-ஆக உள்ளது.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து உயர்கல்வியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேல் பழைய தங்க நகைகளை மக்கள் விற்பனை செய்துள்ளனர். தினமும் கோவையில் 10 முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடையிலான பழைய தங்க நகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பழைய நகைகளை அடமானம் வைத்து வட்டி கட்டி நிதி நெருக்கடியை எதிர்கொள்வதை விட அவற்றை விற்று மீண்டும் பணத்தை சேர்த்து புதிய தங்க நகைகளை வாங்கிக் கொள்ளும் மனப்பான்மை பெரும்பாலான மக்களிடத்தில் உள்ளதே அதிகளவு பழைய நகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு காரணமாகும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உயர்கல்வியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை முற்றிலும் நிறைவடையும் வரை ஒரு மாத காலத்துக்கு இந்நிலை நீடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.