Published : 17 May 2023 06:20 AM
Last Updated : 17 May 2023 06:20 AM

கள்ளச் சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனரா? - விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக ஆய்வு

விழுப்புரம்: மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ம்தேதி கள்ளச்சாராயம் அருந்தியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். முண்டியம்பாக்கம், ஜிப்மர், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வருவாய்துறையினருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தி எவரேனும் உடல் நலமின்றி இருக்கக்கூடுமோ என ஐயப்பாட்டின் பேரில், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறை களப் பணியாளர்களுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டோர் எவரேனும் இருந்தால் அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ அல்லது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ உடனடியாக மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தங்களது ஊர்களில் கள்ளச்சாராயம், விஷசாராயம். போலியான மற்றும் அயல் மாநில மதுபானங்கள் விற்பனை செய்தால், விற்பனை செய்தவர்களின் விவரங்களை 90424 69405 வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரிவிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90424 69405 வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x