

புதுச்சேரி: “கள்ளச் சாராயம் விற்பதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா இன்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''சிக்கிம் மாநிலத்தில் இருந்து நம்முடைய மாநிலத்துக்கு படிக்க அல்லது தொழில் ரீதியாக குடியேறி, அதன் மூலம் இங்கு அவர்கள் பணியாற்றும் போது, இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்கும் இருக்கிறது. அதே நேரத்தில் நாம் எல்லோரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். வேவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகின்ற எல்லா மாநில தினங்களும் கொண்டாடப்படும். அந்த வகையில் சிக்கிம் மாநில தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அடுத்ததாக தெலங்கானா மாநில தினம் கொண்டாடப்படும்.
மரக்காணத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். இது விழுப்புரத்தில் நடந்த ஒரு கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். முதலில் இத்தகைய கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்பதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச் சாராயம் உடம்புக்கு எவ்வளவு கேடு என்பதை, அதை தயாரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கள்ளச் சாராயம் அருந்தி உயிர் வாழ்ந்தால் கூட கண் பார்வை போய்விடும். ஏதோ சிறிது நேரம் போதைக்காக வாழ்க்கையை இழக்க வேண்டாம். எவ்வளவு உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை மனதுக்கு வருத்தமான ஒன்று. எனவே கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதை எடுத்துக் கொள்பவர்கள் கூட, தயவு செய்து இனிமேல் இத்தகைய தவறான பாதைக்குச் செல்ல வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன்.
புதுச்சேரியில் போதைப் பொருட்கள், கள்ளச் சாராயம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என சொல்லி நம்முடைய கடமை, பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது. கள்ளச் சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். கள்ளச் சாராயம் புதுச்சேரியில் இருந்து வந்தது என்று சொல்லி, சில பொறுப்புகள் எங்களுக்கு இல்லை என்று எந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது. இதில் மக்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.