Published : 16 May 2023 06:00 AM
Last Updated : 16 May 2023 06:00 AM

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

திருச்சி: கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார்.

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டதில் 9 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் வாங்கியமதுவை அருந்திய 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படுமோ என அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (இன்று) மரக்காணம் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆளும் காரணத்தால், இப்படிப்பட்ட கொடுமைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது என்று, சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது பேசினேன். இதை அரசு சரியான முறையில் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

எனவே, இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலினும், துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x