எரிசாராயம் கடத்தலுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு

எரிசாராயம் கடத்தலுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுச்சேரி: எரிசாராயம் கடத்தலில் தமிழகம்-புதுச்சேரி அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது ''தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு ஆர்.எஸ். கடத்தப்பட்டு இங்குள்ள சிலரின் துணையோடு போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டிலில் சரக்கு ஏற்றப்பட்டு புதுச்சேரி, காரைக்காலில் இருந்து செல்கிறது. இதனால் புதுச்சேரி, தமிழக அரசுகளுக்கு வருமானம் இல்லை. இதில் தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகளின் கலால், காவல் துறையினர் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது.

தமிழக அரசு மட்டுமின்றி புதுச்சேரி அரசும் ஓர் காரணம். மதுபானக் கடத்தல் தொடர்பாக புதுச்சேரி அரசிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் இருந்து போலி மதுபானம் கடத்தலை தமிழக காவல் துறை பிடித்தாலும் புதுச்சேரி கலால் துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசைத்தொழில் போல் நடத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளேன். போலி மதுபானக் கடத்தலில் காரைக்காலில் முன்னாள் எம்எல்ஏ சிக்கியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் புதுச்சேரிக்கு எரிசாராயத்தை கொண்டு வரமுடியாது. இருமாநில அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை கலால் துறை பாதுகாக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதில் சம்பந்தப்பட்டோரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு முதல்வர் நிவாரண நிதியில் செலுத்தவேண்டும். முதல் அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுத்து, கலால்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் கூட்ட வேண்டும். புதுச்சேரியில் பஸ்கள், ரயில்கள், லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது. கலால் துறையில்அதிக காவல் துறையினரை நியமிக்க வேண்டும்.

கலால் துறை பாதுகாப்பு பிரிவானது எஸ்பி தலைமையில் கொண்டு வரவேண்டும். புதுச்சேரி, தமிழகம் மதுவிலக்கு மாநிலம் இல்லை. இங்கேயே போலி மது குடித்து மக்கள் இறந்தது வெட்ககேடான செயல். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். மதுபானக் கடத்தல் தொடர்பாக அதிமுக தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி முதல்வரும் ராஜினாமா செய்ய கோருகிறீர்களா என்று கேட்டதற்கு, "புதுச்சேரி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. அவரிடம் அதிகாரிகள் சரியான தகவலை தராததுதான் பிரச்சினை" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in