Published : 14 May 2023 04:05 AM
Last Updated : 14 May 2023 04:05 AM
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் ரூ.110.92 கோடியில் அமையவுள்ள புதிய துணை மின் நிலையப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐசிஎஃப் சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.61 கோடியே 98 லட்சத்தில் 500 மீட்டர் நீளம் மற்றும் 8.50 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இருவழி மேம்பாலத்துக்கு “மேயர் சிட்டி பாபு மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி முதல்வர் திறந்து வைத்தார்.
இம்மேம்பாலமானது, கொளத்தூர் பகுதியை அண்ணா நகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். இம்மேம்பாலத்தினால் கொளத்தூர் ஜிகேஎம் காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி, ஐ.சி.எஃப். அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளை சார்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
புதிய மின் திட்டப் பணி: கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகரில் ரூ.110 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள துணை மின் நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த துணை மின் நிலையம் அமைப்பதன் மூலம் கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், கணேஷ் நகர் மற்றும் நேர்மை நகர் ஆகிய பகுதிகளுக்கு மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதிகரித்து வரும் மின் தேவையை சீராக வழங்கவும் இயலும். இதன்மூலம் 3,19,000 மின்நுகர்வோர்கள் பயன்பெறுவர்.
அதேபோல் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் பழுதடைந்த பழைய குடிநீர் குழாயை மாற்றி புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். ஜிகேஎம் காலனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டிடம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கௌதமபுரம் திட்டப் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட 51 பேருக்கு முதல்வர் வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, ஏ.வெற்றியழகன், துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT