ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் நேற்று முன்தினம் (மே 11) இரவு சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்து விட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (மே 11) 8.30 மணிக்கு பழநி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.
கோம்பைபட்டி பகுதியில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கோம்பைபட்டி, சத்திரப்பட்டியில் இரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து விழுந்தன. இதேபோல் நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கின. சத்திரப்பட்டி பகுதியில் விவசாயிகள் நடவு செய்திருந்த முருங்கை மரங்களும் முறிந்து விழுந்தன.
பல இடங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: "அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
