

அண்ணாமலை மீது டிஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல்: சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டார். இந்த பட்டியல் தொடர்பாக, திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகூறி சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, அவதூறு வழக்கில் அண்ணாமலைக்கு நிச்சயமாக தண்டனை பெற்று தரப்படும். சட்ட ரீதியாக தற்போது வரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை. திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு." என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
என் மீது இன்னொரு அவதூறு வழக்குத் தொடர்க - அண்ணாமலை: "பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கில் முழு ஆடியோ ஆதாரத்தையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தயராக இருக்கிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இபிஎஸ்-ஐ தவிர்த்து விட்டு அதிமுக ஒன்றுபடும்: அதிமுகவை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர்த்து விட்டு, அதிமுக ஒன்றுபடும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக ஒன்றுபட வேண்டும்; அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால்தான் ஓபிஎஸ், தினகரனைச் சந்தித்தார். ஆனால் இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி கற்பனையாக ஏதேதோ பேசிவருகிறார். இபிஎஸ் பதவி மோகத்தால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இபிஎஸ்-சை தவிர்த்து விட்டு அதிமுக ஒன்றுபடும்" என்றார்.
தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை- தமிழிசை: டெல்லி ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர்,"அது டெல்லி அரசுக்கு வழிமுறை சொல்லியிருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானது தான். நீதிமன்றத் தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார். இந்த நிலையில், இந்தத்தீர்ப்பு மகிழ்ச்சி தருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
“புதிய நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப தேசிய கல்விக் கொள்கை ”: அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான 29-வது மாநாடு குஜராத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்று இந்தியாவில் 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தேவைகளை மனதில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு நாம் மாணவர்களை புத்தக அறிவு உள்ளவர்களாக உருவாக்கினோம். ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த நிலை மாறிவிடும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும்- டிகே சிவக்குமார்: கர்நாடகத் தேர்தல் தொடர்பாக வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. 3 நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், நான் முதலில் இருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறேன். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனவே தொங்கு சட்டப்பேரவை குறித்தோ, மஜதவுடன் கூட்டணி குறித்தோ பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைய இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தங்கள் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தரும் என்று பாஜக முன்னாள் அமைச்சரும், கல்யாண் ராஜ்ஜிய பிரகதி என்ற தனிக்கட்சி தொடங்கியவருமான ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.
68 நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்திவைப்பு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி உள்பட 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி உயர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த கீழமை நீதிபதிகள் 68 பேருக்கு பதவி உயர்வு வழங்க அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையை ஏற்று அம்மாநில அரசு அவர்களை மாவட்ட நீதிபதிகளாக உயர்த்தியது. இதை எதிர்த்து ரவிகுமார் மஹெதா, சச்சின் பிரதாப் ராய் மேதா ஆகிய இரு மூத்த சிவில் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு, வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில்,"உயர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையை ஏற்று 68 பேரை மாவட்ட நீதிபதிகளாக உயர்த்திய மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு பொருத்தமான அமர்வுக்கு மாற்றப்படும்" என்று தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்இ பாடத்தில் பயின்ற 12, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. 12ம் வகுப்பில் 87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் குறைவு. 10 வகுப்பு தேர்வில் 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ நிர்வாகம் இந்த ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மெரிட் பட்டியலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கதவை தட்டவில்லை; தகர்த்துக் கொண்டிருக்கிறார்': “ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான வாய்ப்பிற்கான கதவை வெறுமனே தட்டவில்லை. தொடர்ச்சியாக ரன் குவித்து அதை தகர்த்துக் கொண்டுள்ளார். தனது அபார டொமஸ்டிக் கிரிக்கெட் ஃபார்மை அப்படியே ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடரச் செய்துள்ளார். என்ன ஒரு திறன் படைத்த வீரர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பான வீரர்களின் கைகளில் இருக்கிறது. இதன் மூலம் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார்” என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறிதச்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 575 ரன்களை ஒரு சதம் 4 அரைசதங்களுடன் 167.15 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் யஷஸ்வி. இதைத்தொடர்ந்து அவரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
“சிறையில் இம்ரான் கானை கொலை செய்ய சதி”: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் வைத்து கொல்ல சதி நடந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கானை சந்தித்த அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “இம்ரான் கானுக்கு மாராடைப்பு ஏற்படுத்தும் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவரை கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. என்னிடம் இம்ரான் கான் மார்பில் தான் வலியை உணர்வதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு உணவும் வழங்கவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.