

திண்டுக்கல்: பழநி பகுதியில் ஒரே நேரத்தில் பலவகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் சீசன் களைகட்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், பழநி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 16,000 ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மாம்பழம் சீசன் இருக்கும். தற்போது சீசன் என்பதால் மாம்பழம் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு தினமும் பழநி வழியாக ஏராளமானோர் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பழநியில் கொடைக்கானல் சாலையில் அதிகளவில் தற்காலிக மாம்பழக் கடைகள் முளைத்துள்ளன. அல்போன்சா, கிளிமூக்கு, செந்தூரம், மல்கோவா, பங்கனபள்ளி என ஒரே நேரத்தில் பலவகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் சீசன் களைகட்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். செந்தூரம் வகை மாம்பழம் ஒரு கிலோ ரூ.60-க்கும், அல்போன்சா, மல்கோவா மாம்பழம் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ''சீசன் ஆரம்ப நிலை என்பதால் வரத்து குறைவாக உள்ளது. ஓரிரு நாட்களில் வரத்து அதிகரிக்கும் போது விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.