மணிப்பூர் நிலவரம் முதல் முதல் முடிசூடிய மூன்றாம் சார்லஸ் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 6, 2023

மணிப்பூர் நிலவரம் முதல் முதல் முடிசூடிய மூன்றாம் சார்லஸ் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 6, 2023
Updated on
3 min read

பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டார் மூன்றாம் சார்லஸ்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மூத்த மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்றார். சட்டத்தையும் இங்கிலாந்து திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று அவர் உறுதிமொழி ஏற்றார். இதனைத்தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மகுடம் சூட்டப்பட்டது. கையில் செங்கோலும் அளிக்கப்பட்டது. பிரிட்டனின் அரச அரியணையில் வயதான நிலையில் இருக்கும் ஒருவருக்கு மன்னர் மகுடம் சூட்டுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

ஆளுநரின் ‘காலாவதி’ கருத்துக்கு முதல்வர் பதில்: சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு, மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன்மூலம், திராவிட மாடல் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். மேலும் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், 6905 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

‘அவசரநிலை முடிவுக்கு வந்தாலும் தனி மனித பாதுகாப்பு அவசியம்’ “உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் வெள்ளிக்கிழமை ஒரு செய்தியினை அறிவித்திருக்கிறார். உலக மக்களை மிகப் பெரிய அளவில் மன நிம்மதி அடையச் செய்யும் செய்தியாக அது இருக்கிறது. உலகளாவிய அவசர சுகாதார நிலையை வெள்ளிக்கிழமை முதல் விடுவித்துக் கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். இது மிகப்பெரிய அளவிலான மனநிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இது மகிழ்ச்சி தரக் கூடிய செய்திதான் என்றாலும்கூட, தனி மனித பாதுகாப்பு என்பது தொடர்ச்சியான அவசியம் என்பதை நாம் உணர்வோம். எனவே, பொது இடங்களில் பெரிய அளவில் கூடும்போது முகக் கவசங்கள் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிக் கொள்வதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இத்துறையின் வேண்டுகோள்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ஆளுநர் என்ன ஆண்டவரா? - அமைச்சர் சேகர் பாபு கேள்வி: சென்னை, வில்லிவாக்கத்தில் மேம்பாலப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "ஆளுநர் குறிப்பிடுவது போல இரு விரல் பரிசோதனை நடைபெற்றது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் கூறுகிறாரா? புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் என்ன ஆண்டவரா? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சி? காலாவதியாக போவது ஆளுநர் பதவியும் அவர் முன் நிறுத்த நினைக்கும் இயக்கமும்தான்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் "சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததாக தமிழக ஆளுநர் சொல்லியிருக்கிறார். அச்சமயத்தில் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை படிவமும் ஆய்வு செய்யப்பட்டது. அப்படிவத்தில் Two finger test என்று சொல்லக் கூடிய இரு விரல் பரிசோதனை அச்சிறுமிக்கு செய்யவில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதிமுக திட்டம் என்பதால் பள்ளியை மூட துடிக்கும் திமுக: இபிஎஸ்: காவலர்களின் குழந்தைகளுக்கான பள்ளியை திமுக அரசு மூடத் துடிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு காவலர்களின் குழந்தைகளுடைய கல்வி வளர்ச்சிக்காகக் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால் இப்பள்ளி வளாகத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை மாற்றி இருக்கும் திமுக அரசின் செயலை கடுமையாகக் கண்டிக்கிறேன். ஏற்கெனவே, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில், காவலர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் காவலர்,பொதுமக்கள் ஒருங்கிணைப்புடன் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, காவலர்களின் குழந்தைகளுக்கான பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்திட இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

“திருமாவளவனை ஆளுநர் விமர்சித்தது அதிகாரத்தின் உச்சம்”: எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை துணைநிலை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி எதிர்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் தரமான இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியின் எம்.பி, குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆளுநர் தனது கருத்தைத் திரும்ப பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சனிக்கிழமை பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி, அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார். கர்நாடகா போலீஸும், தேர்தல் ஆணையமும் மவுனமாகவே இருக்கும். ஆனால் கர்நாடகா மக்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை. அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். இதில் அடங்கி இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்" என தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் உயிரிழப்பு: மணிப்பூரில் நடந்த கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலவரம் நடந்து இரண்டு நாள் கடந்து விட்ட நிலையில் தலைநகர் இம்பாலில் சனிக்கிழமை கடைகள், சந்தைகள் திறந்திருந்தன. நகரில் இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்பி வருகிறது. ராணுவத்தினரின் உறுதியான நடவடிக்கையால் அமைதி திரும்பி வரும் நிலையில், சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கின. பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 13,000 பேர் வெளியேற்றப்பட்டு ராணுவ முகாம்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்: கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை நான்குக்குப் பூஜ்ஜியம் என்று கைப்பற்றியது. இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் 113 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் சுட்டுக் கொலை: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் பாகிஸ்தானின் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவராக இருந்து வரும் பஞ்ச்வார் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in