

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலையில் சவ்சவ் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கும், ஒரு சிப்பம் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள மலைவாசஸ்தலமான சிறுமலையில் உள்ள புதூர், பழையூர், தென்மலை, பசலிக்காடு, தாளக்கடை, குரங்கு பள்ளம், அகஸ்தியர்புரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 1,000 ஏக்கரில் சவ்சவ் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுமலையில் மூலிகை மிகுந்திருப்பதால் இங்கு விளையும் சவ்சவ் காய்களுக்கு தனி கிராக்கி உண்டு.
இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தற்போது சவ் சவ் சீசன் தொடங்கியுள்ளதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு சிப்பம் (45 கிலோ ) ரூ.250 முதல் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது. விளைச்சல் இருந்தும் எதிர்பார்த்த விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமலையைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது: விளைச்சல் அதிகரிப்பு மற்றும் மழையால் சவ்சவ் காய்களுக்கு மவுசு குறைந்துள்ளது. தற்போதுள்ள விலை நடவு, வேலையாட்கள் கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் செலவுக்கு கூட போதாது. ஒரு சிப்பம் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றால் மட்டுமே ஓரளவுக்கு கட்டுப்படியாகும். சவ்சவ் காய்களை சேமித்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய வசதியாக சிறுமலையில் சேமிப்பு கிட்டங்கி அமைத்து தர வேண்டும், என்றார்.