

இயக்குநரும், நடிகருமான மனோபாலா மறைவு: தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்சினையால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கியவர் 1982-ம் ஆண்டு கார்த்திக் - சுஹாசினி நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’யின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். விஜயகாந்தை நாயகனாக வைத்து "சிறைப்பறவை", "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்", "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்", நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த "ஊர்க்காவலன்", சத்யராஜ் நடிப்பில் "மல்லு வேட்டி மைனர்" என 80-களின் முன்னணி நாயகர்களை இயக்கி வெற்றிகண்டார்
உதவி இயக்குநராக அறிமுகமான படத்திலேயே ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து நடிகராகவும் அறிமுகமானார் மனோ பாலா. தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், என ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகின. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
300-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர்; 24 படங்களை இயக்கியவர்; தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞரான மனோபாலா மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் என்றென்றும் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.
மனோபாலாவுக்கு புகழஞ்சலி: "சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய மனோபாலாவின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்
நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் குறிப்பில் “இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த் தனது இரங்கல் செய்தியில், “எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் மனோபாலாவின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
“என் மாணவன் மனோபாலா மறைவு, எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.” என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
‘டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை’: “டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திமுக ஆட்சி அமைந்த 2 ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது. டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
டிஎன்பிஎஸ்சி-யின் அதிகார வரம்பு: ஐகோர்ட் தகவல்: பட்டியலினத்தவருக்கான சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறை 324, 326, 506-1 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்த பி.டி.உஷா: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா புதன்கிழமை சந்தித்தார். முன்னதாக, கடந்த வாரத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பி.டி.உஷா,"மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். அவர்கள் விசாரணைக் குழுவின் அறிக்கை வரும் வரைக்காவது காத்திருந்திருக்க வேண்டும். அவர்களின் செயல் விளையாட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதில்லை. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தின் தந்தையும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் போகத் அளித்தப் பேட்டி ஒன்றில், "திரைப்பிரபலங்கள் யாரிடமும் நான் ஆதரவை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அமீர்கான் ஒரு ட்வீட்டை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" கூறியிருக்கிறார்.
‘தி கேரளா ஸ்டோரி’- தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை: விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் படத்திற்கு கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் அது பரவலான போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், உளவுத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை கவனம் பெறுகிறது.
‘தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு’: தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஏப்ரல் 27-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது தன்பாலின தம்பதிகள் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்காவிட்டாலும், அவர்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பது தொடர்பாக தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், கேபினட் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தன்பாலின தம்பதிகளுக்கான சமூகத் தேவைகள் பற்றி ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடக சுதந்திர குறியீடு: 161-வது இடத்தில் இந்தியா: சர்வதேச ஊடக செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்பான ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊடக சுதந்திரம் பற்றிய தரவரிசையை வெளியிடுட்டு வருகிறது. அந்த வகையில் 2002ஆம் ஆண்டில் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161-வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 150-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் ஊடக சுதந்திர நிலை சரிந்துள்ளது. பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியா பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உற்சாக கோஷத்துடன் வலம் வந்த மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேர்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷங்களை எழுப்பி 4 மாசி வீதிகளிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.