தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், "திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும்" என்று கோரியிருந்தனர்.

ஆனால், "தன்பாலின உறவாளர்கள் திருமண வாழ்க்கையை, இந்திய குடும்பமுறையுடன் ஒப்பிட முடியாது. தன்பாலின உறவாளர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் நடைமுறையில் இருக்கும் குடும்ப நடைமுறையுடன் ஒப்பிட முடியாது" என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, கடைசியாக கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்தபோது தன்பாலின தம்பதிகள் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்காவிட்டாலும், அவர்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பது தொடர்பாக தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், கேபினட் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தன்பாலின தம்பதிகளுக்கான சமூகத் தேவைகள் பற்றி ஆராயப்படும் என்று தெரிவித்தது.

ஐரோப்பாவில் கூட... - மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கூட இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 46 நாடுகளில் வெறும் 6 நாடுகள் தான் தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்துள்ளன. அதேபோல் ஐரோப்பிய யூனியன் அமைப்பு உறுப்பு நாடுகள் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை” என்றார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in