

தமிழகத்தில் 5 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல்: கேட்டர்பில்லர், பெட்ரோனஸ் உள்ளிட்ட 5 வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிடிஆர் ஆடியோ சர்ச்சை - முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்: ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவவில்லை’ என்று அவர் தெரிவித்தார்.
‘திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு இடமில்லை’: ‘2019 அதிமுக ஆட்சியில் சிறப்பாக பணியாற்றி என்னிடம் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை, களக்காரி VAO துரை.பிருத்விராஜ் தற்போது தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால் வேலையை ராஜினாமா செய்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன்மூலம் நிருபணமாகிறது’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் புதிதாக திருமாங்கல்ய சரடு மாற்றி மகிழ்ந்தனர். விழாவை ஒட்டி விரிவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மகளிருக்கு ரூ.2000, பஜ்ரங் தள அமைப்புக்கு தடை - காங். தேர்தல் அறிக்கை: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இணைந்து தேர்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். அதில், மகளிர்க்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை, பஜ்ரங் தளம், பாப்புளர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளுக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி என்று பாஜக தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளின் அறிக்கையைப் போல உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் கட்சிக்கு முன்பு ராமர் பிரச்சினையாக இருந்தார். இப்போது அவர்கள் ஹனுமனை பிரச்சினையாக்கி தேர்தல் அறிக்கையில் அடைத்துள்ளனர். அதனால்தான் பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.
“ஊழல் தடுப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்?” - ராகுல் காந்தி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தீர்த்தஹல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் அப்போது அவர், "மக்கள் பாஜகவை '40 சதவீத கமிஷன் அரசு' என்று முத்திரை குத்தினார்கள். குழந்தைகள் கூட இதை ‘40 சதவீத அரசு’ என்று அழைக்கிறார்கள். பிரதமருக்கு எல்லாம் தெரியும். பிரதமர் இங்கு வந்து இந்த மோசடிகள் பற்றி பேசுவதில்லை. ஒரு குழந்தைக்கு இங்கு ஊழல் தெரியும் என்றால், பிரதமருக்கு எப்படி தெரியாமல் போகும்? இங்கு ஊழலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். எத்தனை பேரை பதவி நீக்கம் செய்தீர்கள் என்பதை எல்லாம் மக்களிடம் சொல்லுங்கள்" என்று ராகுல் காந்தி பேசினார்.
மிஸ் கூவாகம் ஆக சென்னை நிரஞ்சனா தேர்வு: தமிழக அரசின் சமூகநலத் துறை, தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் சார்பில் நடந்த மிஸ் கூவாகம் 2023 நிகழ்ச்சியில், மிஸ் கூவாகம் ஆக சென்னையைச் சேர்ந்த கே. நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாமிடத்தை சென்னை ஜி.டிஷாவும், மூன்றாமிடத்தை சேலம் இ.சாதனாவும் பெற்றனர். மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கூறும்போது ''திருநங்கைகளான எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். சலுகை தேவையில்லை. எங்களுக்கும் எல்லா திறமைகளும் உள்ளது” என்றார்.
“தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்” - சரத் பவார்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் அறிவித்துள்ளார். இருப்பினும் தீவிர அரசியலில் தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அதன் தலைவராக சரத் பவார் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலுக்கும் ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்பட சர்ச்சை: விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் முன்னோட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தால் ரூ.1.11 கோடி பரிசு வழங்கப்படும் என்று கேரள முஸ்லிம் அமைப்பு மற்றும் ஒரு வழக்கறிஞர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய 10 காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் பேட்டி இடம்பெறும் ஒரு காட்சி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாக மாறும் என்று சொல்வது காட்டப்படுகிறது. இந்தக் காட்சியை தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது. இது தவிர இந்து கடவுள்கள் குறித்த பொருத்தமற்ற வசனங்கள் இடம்பெற்ற சில் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியக் கோப்பைக்கு தகுதி பெற்றது நேபாள கிரிக்கெட் அணி!: காத்மண்டுவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேபாள அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி பெற்றுள்ளது.
‘உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலி’ - யுஎஸ்: உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் அதிமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.