“தேசியவாத காங்கிரஸ்  தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்” - சரத் பவார் அறிவிப்பு

சரத் பவார் | கோப்புப்படம்
சரத் பவார் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் அறிவித்துள்ளார். இருப்பினும் தீவிர அரசியலில் தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அதன் தலைவராக சரத் பவார் இருந்து வந்தார். இந்தநிலையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று (மே 2) அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்," நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. அதில் எந்தவிதமான பொறுப்புக்களையும் ஏற்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மகாராஷ்டிரா மற்றும் தேசிய அரசியலில் கவனம் செலுத்த உள்ளேன்.

கடந்த மே 1, 1960 முதல் மே 1, 2023 வரையிலான நீண்ட அரசியல் தலைமைப் பதவியில் இருந்து கொஞ்சம் விலகியிருப்பது அவசியமாய் இருக்கிறது. அதனால், நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன்.

தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், பொதுவாழ்க்கையில் இருந்து நான் விலகவில்லை. தொடர்ந்து பயணம் என்பது எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. நான் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பேன். நான் புனேவிலோ, மும்பையிலோ, பாரமதி, டெல்லி அல்லது இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தாலும் எப்போதும் போல உங்களுடன் இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைவர் யார்? கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, கட்சியின் மூத்த உறுப்பினர்களான சுப்ரியா சுலே, அஜித் பவார், ப்ரஃபுல் பாட்டீல், ஜெயந்த் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோப், சாகன் புஜ்பால் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும் என்று சரத் பவார் தெரிவித்தார்.

சரத் பவார் தனது முடிவினை அறிவித்தவுடன் அரங்கில் கூடியிருந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள், அவர் தனது முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். தனது முடிவினைத் திரும்ப பெறும் வரை அரங்கை விட்டு வெளியேறப்போவதில்லை என்றும் தொண்டர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in