

கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: சென்னை மெரினா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நினைவுச் சின்னத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். தேசிய கடலோரா ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. ஆமை இனப்பெருக்க காலத்தில் நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
நினைவுச் சின்னத்திலிருந்து சாலை இணைப்பு, போக்குவரத்து மேலாண்மை, அவசரகால பாதுகாப்பு திட்டம் ஆகியன அறிக்கையில் குறிப்பிடப்பட்டதுபோல் எள்ளளவும் வேறுபடாமல் பின்பற்றப்பட வேண்டும். பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான விவரங்களில் ஏதேனும் தவறான, போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் எந்த நேரத்திலும் அனுமதி வாபஸ் பெறப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அனுமதியானது தேசிய பசுமை தீர்ப்பாயம், தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வங்கக் கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முதல் ‘மருத்துவச் சுற்றுலா மாநாடு’- முதல்வர் தொடங்கி வைத்தார்: தமிழகத்தில் முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழக மருத்துவ சுற்றுலா மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
“இளைஞர்களை மது அருந்த தூண்டுகிறது திமுக அரசு”: “சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி இயந்திரம், மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட தமிழக அரசுக்கு இல்லையா?” என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு: உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில மணி நேரங்கள் கழித்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரிஜ் பூஷன் சரண், "நான் நிரபராதி, எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நான் மதிக்கிறேன். எனக்கு நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் நான் குற்றவாளி இல்லையே. இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும்" என்று தெரிவித்துள்ளார்.
‘பிரிஜ் பூஷனை அரசு பாதுகாக்கிறது’ - பிரியங்கா குற்றச்சாட்டு: பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரிங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற ஏன் இவ்வளவு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பெண்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நிறைய செய்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அரசு அந்த மனிதரைப் பாதுகாக்கிறது. நம் பெண்களை நாம் காப்பாற்ற முடியவில்லை என்றால் நாட்டை பற்றி என்னவென்று சொல்வது" என்று தெரிவித்தார்.
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் - வைகோவுக்கு கடிதம்: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
“வாக்குகள் மூலம் காங்கிரஸுக்கு மக்கள் பதிலடி தருவர்”: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். பிதார் மாவட்டத்தின் ஹம்னாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்னை ‘விஷப் பாம்பு’ என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் என்னைக் கடுமையாக திட்டுவது இது முதல்முறை அல்ல.
காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவதை அவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். எப்போதெல்லாம் நீங்கள் மற்றவர்களை கடுமையாக திட்டுகிறீர்களோ அப்போதெல்லாம் எழுந்திருக்க முடியாத அளவுக்கு மக்கள் உங்களை தண்டித்திருக்கிறார்கள். இந்த முறையும், நீங்கள் திட்டியதற்கான பதிலடியை மக்கள் வாக்குகள் மூலம் உங்களுக்கு தருவார்கள்" என்றார்.
எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா சனிக்கிழமை திறந்து வைத்தார்.
பின்னர் சிறப்புரை ஆற்றிய அவர், "மெய்நிகர் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றம் வர தேவையில்லை. அனைவருக்கும் பிரச்சினைகள் இருப்பதால் அவற்றை தீர்க்கவே நீதிமன்றங்களை துவங்க வேண்டியுள்ளது. இளம் வழக்கறிஞர்கள் வாதங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் முன்வைக்க வேண்டும்" என்று பேசினார்.
‘உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்’: அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஃபார்ம் மூலம்தான் டெஸ்ட்டுக்கு தேர்வானாரா ரஹானே?: வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே தேர்வு செய்யப்பட்டதை ரவி சாஸ்திரி வரவேற்றுள்ளார். மேலும், சிஎஸ்கே அணிக்காக தற்போது ஐபிஎல் 2023 தொடரில் அட்டகாசமாக அவர் ஆடுவது மட்டுமே ரஹானே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணமல்ல, சிலர் இப்படி எண்ணுவது இடையில் ரஹானே என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அறியாதவர்கள் என்று சாடியுள்ளார். அத்துடன், ஐபிஎல் சீசனுக்க்கு முன்பு ரஹானே 6 மாதங்களாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி, 600 ரன்களை எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.