Published : 29 Apr 2023 10:50 AM
Last Updated : 29 Apr 2023 10:50 AM
சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி உள்ளார்.
மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகளை கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் வைகோவின் பேச்சில் உறுதியும், உண்மையும் இருக்கும் என்று நம்பி வைகோவை ஆதரித்தனர்.
ஆனால் வைகோவின் குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக வைகோவை ஆதரித்து திமுகவில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணி தலைவர்களும், தோழர்களும் மதிமுகவை விட்டு படிப்படியாக வெளியேறி மீண்டும் திமுகவிற்கு சென்று விட்டனர்.
வைகோவிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால் ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொண்டவர்களையும், புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும் ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
மகனை ஆதரித்து அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் பொதுவெளியில் கழகத்தினர் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னமும் உணராமல் உள்ளது வருந்தத்தக்க வேதனையான நிகழ்வு.
கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT