

தருமபுரி: தருமபுரியில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளின் இயக்கத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைக்காக தினமும் 376 அரசுப் பேருந்துகளும், 156 தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக சிஎன்ஜி இயற்கை எரிவாயுவைக் கொண்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் தற்போது சிஎன்ஜி இயற்கை எரிவாயு மூலம் இயக்கிட 2 தனியார் பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தருமபுரி-சேலம் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் 2 பேருந்துகள் மட்டும் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளின் இயக்க தொடக்க நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். சிஎன்ஜி இயற்கை எரிபொருள், டீசல் எரிபொருளை விட அதிக செயல்திறனும், குறைந்த காற்று மாசுபாடும் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தருமபுரி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் டிஎன்சி மணிவண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் லாவண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.