

சென்னை: மாநகராட்சிகளில், மன்ற அனுமதியின்றி ரூ.3 கோடி வரை ஆணையர்செலவிட அதிகாரம் வழங்கி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று கோஷங்களை எழுப்பினர்.
சென்னை மாநகராட்சி சார்பில் ஏப்ரல் மாத மாமன்றக் கூட்டம் ரிப்பன்மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியாதலைமை தாங்கினார். துணை மேயர்மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, மன்ற அனுமதியின்றி ரூ.3 கோடி வரை ஆணையர் செலவிட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அதைதிரும்பப் பெறவும் வலியுறுத்தினர். இதற்கு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் பேசும்போது, ``கடந்தஏப்.12-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைமாநகராட்சி தொடர்பான விதிகளில்திருத்தம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், மாநகராட்சி மண்டலங்கள் அளவில் செலவிடநிர்ணயிக்கப்பட்ட தொகையான ரூ.10 லட்சம் வரை என்ற அளவை உயர்த்தவில்லை.
திரும்பப் பெற வலியுறுத்தல்: அதே நேரத்தில், மன்ற அனுமதியின்றி மாநகராட்சி ஆணையர், வளர்ச்சி திட்டங்களுக்காக செலவிடும் தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல திருத்தங்கள் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது மாமன்றங்களின், மாநகராட்சி கவுன்சிலர்களின் உரிமையை பறிக்கும் செயல். அதனால் விதிகளை திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றார்.
பூங்கா பராமரிப்பு: தொடர்ந்து, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விஸ்வநாதன் பேசும்போது, ``மகேஷ் மற்றும் முனியாண்டி ஆகிய இரு ஒப்பந்ததாரர்கள் யார்? பூங்கா, விளையாட்டு திடல் பராமரிப்பில் என்னமுறைகேடு நடந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை'' என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு ஆணையர் ககன்தீப் சிங்பேடி பதில் அளிக்கும்போது, ``பூங்காக்கள் பராமரிப்பு தொடர்பான முறைகேடுகளைத் தடுக்க, ஓர் ஒப்பந்ததாரருக்கு, குறிப்பிட்ட பூங்காக்கள் அடங்கிய தொகுப்பு, ஒரே டெண்டராக விடப்படும். ஒருடெண்டரை எடுத்தவர், மற்றொருடெண்டரில் பங்கேற்க முடியாது.அவர்கள் செய்யும் பராமரிப்பு பணிகளுக்கு மதிப்பீடு வழங்கப்படும்.
அதன் அடிப்படையில் மட்டுமே உரிய தொகை விடுவிக்கப்படும். ஒப்பந்தத் தொகை முழுவதுமாக வழங்கப்பட மாட்டாது. முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்ற நடைமுறை பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பிலும் மேற்கொள்ளப்படும்'' என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பேசியகணக்குக் குழு தலைவர் தனசேகரன், ``அதிமுக ஆட்சியில் சில தனியார் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் பரப்பளவைக் குறைத்து, சொத்துவரி மதிப்பீடு செய்து, வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய்மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சிறப்புக் குழு அமைத்துவிசாரிக்க வேண்டும்'' என்றார்.
இறுதியாக, ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் காவேரி மருத்துவமனை அருகே 1000 சதுர அடிஅளவில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் சதுக்கம் அமைக்க அனுமதி வழங்குவது உள்ளிட்ட 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.