

சென்னை: லண்டன், யுனைடெட் கிங்டமில் உள்ள பசுமை அமைப்பு சார்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பசுமை உலக விருது வழங்கப்பட்டுள்ளது. கார்பன் குறைப்பு பிரிவின் கீழ், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவில் மியாமி நகரில் சர்வதேச பசுமை உலக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்துக்கு 2023-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகிறது.
நம்பகமான, விரைவான பயணம்: மெட்ரோ பயணிகளுக்கும், சென்னை மக்களுக்கும் நம்பகமான, வசதியான, பாதுகாப்பான மற்றும் விரைவான பயண அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், சுற்றுச்சூழலின் கட்டுமானம் மற்றும் செயல்பாடுகளின் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் ரீதியாக தோட்டங்களை உருவாக்குதல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.