மதுரை சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் - இறந்த மகன் நினைவாக இருந்த புத்தங்களையும் வழங்கிய பெண்

மதுரை சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் - இறந்த மகன் நினைவாக இருந்த புத்தங்களையும் வழங்கிய பெண்
Updated on
1 min read

மதுரை: மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை சிறையில் கைதிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரியின் முயற்சியால் நூலகத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதன்மூலம் கைதிகளுக்கு தினமும் விரும்பிய புத்தகங்களை வழங்கி, வாசிக்க வைக்கின்றனர். இதன்படி மதுரை, பாளையங்கோட்டை சிறைகளுக்கு புத்தகங்களை சேகரிக்க, இலக்கு நிர்ணயித்து அதற்கான முயற்சியில் மதுரை சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி பாலகிருஷ்ணன் தனது 300 புத்தகங்களை சமீபத்தில் வழங்கினார். அதுபோன்று நடிகர் விஜய்சேதுபதி, வழக்கறிஞர் சாமித்துரை, பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் தொடர்ந்து தங்களால் முடிந்தவரை சிறை நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்குகின்றனர். இதுவரை சுமார் 35 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மத்திய சிறைக்கு வந்த டிஜிபி அம்ரேஷ்பூஜாரியிடம் சிறை நூலகத்திற்கென மதுரை டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் சுமார் 1000 புத்தகங்களை வழங்கினார். ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலரான இவரது ஒரே மகன் பிரவீன் இந்திய விமான படையில் விமானியாக பணியாற்றினார்.

கடந்த 2013-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்களை மீட்கச் சென்றபோது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தனது மகனின் நினைவாக வைத்திருந்த சில புத்தகங்களையும், பணியின்போது அவர் சேகரித்து படித்த பல்வேறு புத்தகங்களையும் வழங்கினார். மேலும், அவரது மகன் புகைப்படத்துடன் கூடிய நாட்காட்டிகளை டிஜிபிக்கு கொடுத்தார். அப்போது மஞ்சுளாவை டிஜிபி பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in