“எங்கள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது” - சூடானில் இருந்து மதுரை திரும்பிய குடும்பத்தினர் உருக்கம்

சூடானிலிருந்து மதுரை வந்துள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர். | படம்: நா. தங்கரத்தினம் 
சூடானிலிருந்து மதுரை வந்துள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர். | படம்: நா. தங்கரத்தினம் 
Updated on
1 min read

மதுரை: சூடான் உள்நாட்டுப் போர் எதிரொலியாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விமானம் மூலம் இன்று மதுரை வந்தனர்.

சூடான் நாட்டில் உள்நாட்டு போரால் பாதிக்கும் தமிழர், இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 'ஆப்ரேசன் காவேரி' என்ற பெயரில் முதல் கட்டமாக 360 பேர் மீட்கப்பட்டனர். தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தகவல் பெறும் விதமாக கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்தனர்.

இவர்களில் சூடான் நாட்டில் பணிபுரிந்த ஜோன்ஸ் திரவியம், சேத்ருத்ஜெபா, ஜென்னி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆகிய 4 பேர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

ஜோன்ஸ் திரவியம் என்பவர் கூறுகையில், ''ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இந்தியர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காட்டுன் உள்ளிட்ட இடங்களில் வசிக்கின்றனர். போர்த் தாக்குதலால் கடந்த 10 நாளாக மின்சாரம், குடிநீர் கிடைக்கவில்லை. பெரும்பாலான இடங்களை துணை ராணுவம் கைப்பற்றியுள்ளது. போர் குறித்து பத்திரிகை, ஊடகங்களில் செய்திகள் வந்ததால் தமிழக அரசு மீட்பு நடவடிக்கை எடுத்தது.

இன்னும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அங்குள்ளனர். அவர்களை வாட்ஸ்- அப் குழு மூலம் மீட்க முயற்சிக்கிறோம். முக்கிய உடமைகளை தவிர. பிற பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. நான் ஒரு பள்ளி இயக்குநராக பணிபுரிந்தேன். எனது மூத்த மகள் ஜென்ஸி ஜோன்ஸ் மருத்துவம் 3-ம் ஆண்டும், 2-வது மகள் ஜோஸ்னா ஜோன்ஸ் 2-ம் ஆண்டும் படிக்கின்றனர். எங்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது. அங்கும், இங்கும் கல்வி முறை வேறு. பிள்ளைகள் படிப்பை தொடர முதல்வர் உதவவேண்டும்'' என்றார். | வாசிக்க > “உள்நாட்டுப் போர் பகுதியில் 26 மணி நேர பஸ் பயணம்” - சூடானில் இருந்து தமிழகம் வந்த 14 வயது சிறுமியின் அனுபவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in