

திருவாரூர்: திருவாரூர் அருகே தனிநபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி விட்டு, அந்த மனையை நெடுஞ்சாலைத்துறைக்கு மீண்டும் விலைக்கு விற்றதாக எழுந்த புகாரில் திருவாரூர் முன்னாள் கோட்டாட்சியரும், விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநருமான முத்து மீனாட்சி உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனரான முத்துமீனாட்சி, கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை திருவாரூர் கோட்டாட்சியராக பணிபுரிந்தார். அப்போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்கியதாகவும், பின்னர் அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக மீண்டும் அரசிடமே விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்மீது புகார் எழுந்தது.
புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்திய திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், அதன் அடிப்படையில் முத்துமீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி மற்றும் அடியக்கமங்கலம் பகுதியைச் சார்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், கடலூர் சுகுமாரி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனில் உள்ள முத்து மீனாட்சியின் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி அப்போது அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி தற்போது விளமல் கிராம நிர்வாக அலுவலராக உள்ள துர்காராணி என்பவரது வீட்டிலும், மேலும் அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி என்பவரின் வீட்டிலும், தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.