

சூடானின் 400 தமிழர்கள் சிக்கித் தவிப்பு: சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட இந்திய குடிமக்களை அழைத்து வரும் "ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணிக்கு தமிழக அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே, சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மது பரிமாறும் சிறப்பு உரிம விதிகளுக்கு இடைக்கால தடை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் தமிழக அரசின் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய திருத்த விதிகளை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்தி நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு , விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியீடு: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே. 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது
ஆடியோ சர்ச்சைக்கு பிடிஆர் விளக்கம்: "திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை சில சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்" என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், உதயநிதி மற்றும் சபரீசன் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால், இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஏஓ வெட்டிக் கொலை - தூத்துக்குடி நிலவரம்: தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் புதன்கிழமை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ, பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, தூத்துக்குடி அருகே மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸை, அவரது அலுவலகத்தில் புகுந்து 2 நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியனை வல்லநாடு அருகே வைத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மற்றொரு நபரான கலியாவூரை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து என்பரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே வைத்து மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் முறப்பநாடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மணல் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து முறப்பநாடு, கலியாவூர், வல்லநாடு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை கோரி வழக்கு: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஒரு கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழரான தங்கராஜு சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா. தமிழரான இவர் 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். மேலும் கஞ்சா கடத்திய வழக்கில் 2018 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது சிங்கப்பூர் அரசு. இவரது மரண தண்டனை சிங்கப்பூரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையும் தங்கராஜுவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறும் வலியுறுத்தியது.
இந்த நிலையில், தங்கராஜு சுப்பையாவுக்கு சாங்கி சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் சுப்பையாவின் இறப்புச் சான்றிதழையும் சிங்கப்பூர் அரசு வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருட்கள் கடத்தலுக்கு மரண தண்டனை அவசியம் என்று சிங்கப்பூர் தொடர்ந்து கூறி வருகிறது. அதுவே, ஆசியாவில் குற்றமற்ற தேசமாக சிங்கப்பூரை தொடர்ந்து வைக்கும் என்றும் அந்நாட்டு அரசு கருதுகிறது. மேலும், சிங்கப்பூரில் பலரும் மரண தண்டனைகளை ஆதரிப்பதாகவும் அரசு கூறுகிறது. கரோனா காலத்தில் மட்டும் சிங்கப்பூரில் 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிய கண்டத்திலேயே அதிக அளவில் மரண தண்டனைகள் இங்குதான் நிறைவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையைச் சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேஷ் பெகல், ''காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நக்ஸல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் விட மாட்டோம்'' என்று தெரிவித்தார்.
செய்யாறு கல்லூரி விடுதியில் ராகிங்: 9 மாணவர்கள் சஸ்பெண்ட்: செய்யாறில் உள்ள ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, ஜூனியர் மாணவர்களை, சாட்டையை கொண்டு சீனியர் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
‘சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை’ - சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ் கூறும்போது, "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட, அது முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. இரு தரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சர்வதே நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளிகளான சூடானைச் சேர்ந்த அஹமத் ஹருனும், முன்னாள் அதிபரான ஓமர் அல் பஷிரும் சூடான் சிறையிலிருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் சிறை உடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ராணுவத்தினரே இருவருக்கும் உதவியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.