

திருவண்ணாமலை: செய்யாறில் உள்ள ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் சுமார் 40 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூனியர் மாணவர்களை, சாட்டையை கொண்டு சீனியர் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ராகிங் தொடர்பான வீடியோ வெளியானது குறித்து துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராகிங் செயலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வர் எச்சரித்து, பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்து அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி பிறப்பித்துள்ள உத்தரவில், "இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களில் சில மாணவர்கள் ராகிங் (பகடிவதை) மூலம் துன்புறுத்தியதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்ததின் பேரில் சமூக ஊடகங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன. மாணவர்களின் புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களின் விசாரணையின் அடிப்படையில் ராகிங் செய்வதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை மேலும் விசாரணை செய்யும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி செய்திக்கிணங்கவும், அறிவுறுத்தலுக்கு இணங்கவும் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தீர்மானத்தின்படியும் கீழ்க்கண்ட மாணவர்களை ஒரு மாத காலம் தற்காலிக இடைநீக்கம் (Suspension) செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோமசுந்தரம் (2ம் ஆண்டு வரலாறு), வி.மாதவன் (3ம் ஆண்டு வேதியியல்),எஸ்.விஜி (3ம் ஆண்டு வேதியியல்), எஸ்.கிருபா (3ம் ஆண்டு வேதியியல்),எ.அருள்முருகன் (3ம் ஆண்டு கணினி அறிவியல்), கே.சத்தியதேவன் (3ம் ஆண்டு பொருளியல்), எ.கார்த்தி (3ம் ஆண்டு கணிதம்), எ.ரஞ்சித் (3ம் ஆண்டு இயற்பியல்), எம்.ரூபலிங்கம் (3ம் ஆண்டு வணிகவியல்) ஆகிய மாணவர்கள் இடைநீக்க காலக்கட்டத்தில் கல்லூரி மற்றும் விடுதிக்கு வருதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | வாசிக்க > மாணவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்திய சீனியர்கள்