

திருவண்ணாமலை: செய்யாறில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியில் ஜுனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் சுமார் 40 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், ஜுனியர் மாணவர்களை, சாட்டையை கொண்டு சீனியர் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இது குறித்து ஜுனியர் மாணவர்கள் கூறும்போது, “சீனியர் மாணவர்களால் தினசரி மிரட்டப்படுகிறோம். அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி சுத்தம் செய்வது முதல், காலையில் எழுப்புவது வரை என அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய வேண்டும் என மிரட்டு கின்றனர்.
அவர்கள் கல்லூரிக்கு சென்றபிறகுதான், நாங்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்பினால், இரவு முழுவதும் உறங்க விடாமல் கயிற்றை சாட்டையாக திரித்து அடித்து துன்புறுத்துகின்றனர். சிலாப்பை பிடித்து தொங்க விடுகின்றனர்.
விடுதி வார்டன், கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகின்றனர். இதுபோன்ற ராக்கிங் கொடுமையில் இருந்து விடுபட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து விடுதி வார்டன் ரவி கூறும்போது, “வார்டனை கூட சீனியர் மாணவர்கள் மதிப்பதில்லை. ராக்கிங் செய்வது குறித்து எச்சரித்தும், அவர்களது செயல் தொடர்கிறது.
ராக்கிங் தொடர்பான வீடியோ வெளியானது குறித்து துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராக்கிங் செயலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வர் எச்சரித்து, பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார்” என்றார்.