

ஓசூர்: ஓசூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம் பழங்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக அளவில் மா உற்பத்தி நடைபெறும் மாவட்டங்களில் கிருஷ்ணகிரியும் ஒன்று. இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. அதேபோல, மாங்கூழ் தொழிற் சாலைகளுக்கும் செல்கின்றன. இந்தாண்டு மா மரங்களில் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மா அறுவடை தொடங்கிய நிலையில், காதர், பீத்தர், அல்போன்சா, இமாம்பசந்த், சக்கரகுட்டி ஆகிய ரகங்கள் ஓசூர் நகரப் பகுதியில் உள்ள பழக்கடைகள், நடைபாதை கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாபாரிகள் சிலர் லாப நோக்கத்துடன் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: மாங்காய்கள் இயற்கை யாகப் பழுக்க வைக்க சுமாா் ஒரு வாரம் பிடிக்கும். ஆனால், வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா்.
இம்முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இம்முறையில் பழுக்க வைக்கும் பழங்களை தற்போது, அதிகாரிகள் மற்றும் நுகா்வோர் எளிதில் கண்டறிவதால், ‘எத்திலின்’ ரசாயனப் பொடி மூலம் பழங்களைப் பழுக்க வைப்பது அதிகரித்துள்ளது.
இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்திருப்பதை எளிதாக கண்டறிய முடிவதில்லை. மேலும், பழங்களைப் பழுக்க வைக்க 100 பிபிஎம் எத்திலின் வாயுவை பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரம் எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதியில்லை.
ஆனால், பொடி மூலம் பழங்களைப் பழுக்க வைப்பது அதிகரித் துள்ளது.எனவே, ஓசூர் நகரப் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப் படும் மாம்பழங் களைக் கண்டறிந்து பறிமுதல் செய்யவும், இம்முறையைத் தடுக்கவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.