

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 980 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்கள் மட்டுமின்றி, வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய 15 முக்கிய இடங்களிலும் வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரு தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் நகரின் சில சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனடியாக உதவும் வகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் சென்னையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இதுதவிர, வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலும் கூடுதலாக வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ரெட்டேரி சந்திப்பு, பேசின் பாலம், மின்ட், செம்பியம் உள்ளிட்ட 15 முக்கிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்குதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட அவசரப் பணிகளுக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஏற்கெனவே 850 தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர்.
பருவமழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில், பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 130 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 980 வீரர்கள் மழைக்கால மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் உள்ளனர்.
வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவசர அழைப்பு கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்று சேரும் வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.