

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மக்களின் நம்பிக்கையைக் குறைக்கும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
அவற்றை எதிர்கொண்டு, எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துவதுடன், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் சந்திப்புகள், ‘ஜனநாயகம் காப்போம்', ‘கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்' யாத்திரை, ‘ராஷ்ட்ரிய சிந்தன் சம்வாத்' என்ற அறிவுசார் உரையாடல், இளைஞர்கள், மாணவர்களுக்கான கலந்துரையாடல்கள், செல்வாக்கு மிக்கவர்களைத் தொடர்பு கொண்டு கருத்துகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு இதழ்கள் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, தேசிய செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சார இயக்கம், அக்.22 (இன்று) தொடங்கி நவ.5 வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.