பற்களை உடைத்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு 3 ஆவணங்களே வழங்க முடியும்: உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்

பற்களை உடைத்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு 3 ஆவணங்களே வழங்க முடியும்: உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்
Updated on
1 min read

மதுரை: அம்பை பல் உடைப்பு வழக்கில்பாதிக்கப்பட்டவருக்கு 3 ஆவணங்களை மட்டுமே வழங்கமுடியும். அனைத்து ஆவணங்களையும் வழங்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பை சிவசக்தி நகரைச் சேரந்த அருண்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, எனது நண்பர் மகேந்திரனுக்கும், சுபாஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் போலீஸார் என்னையும் கைது செய்தனர்.

ஏஎஸ்பி பல்வீர்சிங்: அம்பை காவல் நிலையத்தில் இருந்தபோது, ஏஎஸ்பி பல்வீர்சிங் விசாரணைக்கு அழைத்து, கற்களால் எனது 4 பற்களை தாக்கி உடைத்தார். பின்னர் உரிய சிகிச்சை அளிக்காமல், போலீஸார் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு அம்பை நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், எனது மனுவை நடுவர் தள்ளுபடி செய்தார். நீதித்துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்து, வழக்குத் தொடர்பான ஆவணங்களை எனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏப்.24-ம் தேதி தீர்ப்பு: இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், ஆர்.கருணாநிதி ஆகியோர் வாதிட்டனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "மனுதாரர் கோரியுள்ள ஆவணங்களில், முதல் தகவல் அறிக்கை, கைது ஆவணக் குறிப்பு, சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றின் நகல்களை மட்டுமே வழங்கலாம். வழக்கு தொடர்பான மற்ற ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க சட்டத்தில் இடமில்லை" என்றார். இதையடுத்து, தீர்ப்புக்காக வரும் 24-ம் தேதி வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in