

சென்னை: பஞ்சாயத்து தலைவர் மீது குற்றம்சாட்டி, தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ஹேமா (45). இவர், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க தனது சகோதரியுடன் தலைமைச் செயலகத்துக்கு நேற்று காலை வந்தார். இருவரும் திடீரென எம்எல்ஏக்கள் செல்லும் வழி அருகே நின்று, வீடுஅபகரித்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நேரத்தில் பெண் ஒருவர் திடீரென கோஷமிட்டது அங்குபரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அந்த பெண்ணைதடுத்து நிறுத்தி கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஹேமா கூறும்போது,``எனது அக்கா லலிதாவின் வீடு தையூரில் உள்ளது. அதை பஞ்சாயத்து தலைவர் ஒருவர் அபகரித்துக் கொண்டார். நாங்கள் வீட்டை கேட்டதற்கு தர மறுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைவலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டேன்'' என்றார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.