தன்பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்து முதல் ஏமன் துயரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.20, 2023

தன்பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்து முதல் ஏமன் துயரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.20, 2023
Updated on
3 min read

சென்னையில் வி.பி.சிங் சிலை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த அறிவிப்பில், "மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன். தமிழகத்தை பொறுத்தவரை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்கள். தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்டார். தலைவர் கருணாநிதியை சொந்த சகோதரனைப் போல மதித்தார்.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூக நீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஸுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக, உயர் நீதிமன்றம் தீர்ப்பின் படி,பொதுச் செயலாளர் பதவி உட்பட ஜூலை11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தலைமைத் தேர்தல்ஆணையம் வியாழக்கிழமை தனது முடிவை அறிவித்துள்ளது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இதற்கிடையில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பல்வீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ஏன்?: “அம்பாசமுத்திரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ், அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

தன்பாலினத்தவர் திருமண வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்து: கடந்த ஆண்டு நவ.25-ம் தேதி இரண்டு தன்பாலின திருமண தம்பதிகள் தங்களின் திருமண உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரி தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், "LGBTQIA+ உறவுகளை குற்றமற்றதாக அறிவித்து ஒரு வானவில் நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியபோதே தன்பாலினத்தவர் இடையேயான 'திருமணம் போன்ற நிலையான உறவுகளை' நாங்கள் சிந்தித்தோம். தன்பாலின உறவை அவர்கள் தற்செயலாக நடந்த உறவாக நினைக்காமல், அதையும் தாண்டிய பந்தமாக உணர்வோருக்காக அதைச் சிந்தித்தோம். சிலருக்கு அந்த உறவு வெறும் உடல் சார்ந்தது இல்லை. உணர்வுகள் சார்ந்தது. அவர்களுக்காக தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது பற்றி நாங்கள் சிந்தித்தோம்" என்றார்.

நீதிபதி பட் தனது கருத்துகளை பதிவு செய்கையில், "திருமணம் என்ற கருத்தியல் சமகால புரிதலையும் தாண்டியது. திருமணம் ஒருவகையான கட்டமைப்பை நல்குகிறது. அந்தக் கட்டமைப்பு ஒவ்வொரு காலத்திலும் பரிமாணித்துக் கொண்டே இருக்கிறது. இதுதான் திருமணம் என்று எந்தக் கல்லிலும் எழுதிவைக்கப்படவில்லை" என்றார்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது.

‘இந்தியாவின் 90% பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்’: இந்தியாவின் 90 சதவீத இடங்கள், குறிப்பாக டெல்லியின் அனைத்துப் பகுதிகளும் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக PLOS Climate ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு, காலநிலை மாற்றம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை வெப்ப அலை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வெப்ப அலை பாதிப்பு என்பது இந்திய துணைக்கண்டத்தில் நீண்ட காலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், இது காலநிலை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நாட்டின் காலநிலை பாதிப்பை அளவிடும் மதிப்புகளை மறுமதிப்பீடு செய்யவேண்டிய நேரம் என்று ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“உலக பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் புத்தரின் போதனைகள்”: போர், பொருளாதார ஸ்திரமின்மை, பயங்கரவாதம், மத தீவிரவாதம், பருவநிலை மாற்றம் என உலகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் புத்தரின் போதனைகள் தீர்வைத் தருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச பவுத்த உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ''புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு இந்தியா உதவுகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உதவியது. ஒவ்வொரு மனிதனின் வலியையும் இந்தியா தனது சொந்த வலியாகக் கருதுகிறது" என்றார்.

இந்தியாவில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும். இதனால் தற்போது நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 65,286 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கோவிட் பாதிப்புக்கு 29 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.

இந்தியாவில் 2-வது ஆப்பிள் ஸ்டோர் திறப்பு: இந்தியாவில் தனது இரண்டாவது ஸ்டோரை திறந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். தலைநகர் டெல்லியில் திறக்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக ஸ்டோரை ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் திறந்து வைத்துள்ளார். ஆப்பிள் தயாரிப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்டோரை பார்வையிடும் ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் டெல்லி ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்னதாக, இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்த டிம் குக், ஆப்பிள் சாதன பயனர்களை சந்தித்தார்.

உதவி பெறப்போன இடத்தில் பறிபோன உயிர்கள்: ஏமன் நாட்டில் தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயல கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in