

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே ராமன் தொட்டி கிராமத்தில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என இருளர் பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருளர் பழங்குடியினர் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில், சூளகிரி வட்டம் ராமன் தொட்டி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடிசைகளில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இவர்களுக்குக் கூலித் தொழிலே பிரதானமாக உள்ளது.
இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் முன்னோர் காலத்திலிருந்தே ராமன் தொட்டியில் மலையை ஒட்டியுள்ள பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வனப்பகுதிகளில் கிடைக்கும் தேன், பழங்களைச் சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாய் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தோம்.
தற்போது, விவசாயம் மற்றும் கட்டுமான வேலைக்கு செல்கிறோம். ஒவ்வொரு குடிசை வீட்டிலும் 2 குடும்பங்களுக்கு மேல் இடநெருக்கடியுடன் வசித்து வருகிறோம். மேலும், 12 குடும்பத்தினர் பேரிகை - வேப்பனப்பள்ளி சாலையை ஒட்டியுள்ள பாறை குன்றுகள் அருகே பிளாஸ்டிக் தாள் மூலம் மேற்கூரை அமைத்த குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
குடிசைகளுக்கு மின் வசதி இல்லாததால், எங்கள் குழந்தைகள் எண்ணெய் விளக்கில் படிக்கும் நிலையுள்ளது. இங்கிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கால்நடையாக தினமும் சென்று படித்து வருகின்றனர். நாங்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தோம். ஆய்வுக்கு வந்த அலுவலர்களிடம் சிலர் இங்கு பழங்குடியினர் இல்லை என கூறிவிட்டனர்.
இதனால், வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. தேர்தலின்போது, எங்களுக்கு வீட்டுமனை வழங்குவதாக உறுதியளிக்கும் அரசியல் கட்சியினர் தேர்தலுக்குப் பின்னர் கண்டு கொள்வதில்லை. எனவே, நாங்கள் வசிக்கும் இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா அல்லது மாற்று இடத்தில் தொகுப்பு வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேர்தலின்போது, எங்களுக்கு வீட்டுமனை வழங்குவதாக உறுதியளிக்கும் அரசியல் கட்சியினர் தேர்தலுக்குப் பின்னர் கண்டு கொள்வதில்லை.