இளையபெருமாளுக்கு நினைவு அரங்கு முதல் புல்வாமா புதிய சர்ச்சை வரை செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.18, 2023

இளையபெருமாளுக்கு நினைவு அரங்கு முதல் புல்வாமா புதிய சர்ச்சை வரை செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.18, 2023
Updated on
3 min read

சமூகப் போராளி இளையபெருமாளுக்கு நினைவு அரங்கு: பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இளையபெருமாள் முயற்சியால்தான் சிதம்பரத்தில் இரட்டைப் பானை முறை முடிவுக்கு வந்தது என்பதைப் பேரவையில் நினைவுகூர்ந்த முதல்வர், அவரது நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

மெரினா இணைப்பு சாலையில் போராடுவதை ஏற்க முடியாது: ஐகோர்ட்: சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதையடுத்து, மீன் கடைகளை அகற்றுவதற்கு எதிராக அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“மத்திய அரசின் அனுமதி கடிதம் கிடைக்கவில்லை”: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது விசாரணை நடத்துவது தொடர்பான மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி எஸ்.ஐ-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மருத்துவத் துறையின் புதிய அறிவிப்புகள்: "மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கான நபர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்" என்று சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சித்தா, ஓமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களில் ரூ.917.66 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்; கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வரும் வேளையில், பலதரப்பட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தநிலையில், மேற்குவங்கம், பிஹாரின் சில பகுதிகள், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தன்பாலினத் திருமண வழக்கு: மத்திய அரசு மீது காட்டம்: தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடந்தது அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “இது நீதிமன்றம். இங்கே நாங்கள் தான் பொறுப்பாளர்கள். வழக்கை எப்படி நடத்தவேண்டும் என்பதெல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகக் கூறினர்.

முன்னதாக, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “நாட்டின் 5 கற்றறிந்த அறிவுஜீவிகள் சொல்வதைக் கேட்டெல்லாம் ஒட்டுமொத்த தேசத்திற்கான முடிவையும் எடுக்க முடியாது. இவர்கள் கோரிக்கையை வைத்துக் கொண்டு திருமணம் எனும் அமைப்பிற்குள் ஒரு புதிய சட்டபூர்வ சமூகக் குழுவை உருவாக்கிட முடியாது. அதனால், நீதிபதிகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திடமே விட்டுவிடுவது நல்லது. நாடாளுமன்றம் முடிவெடுக்கும். தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரும் தனிநபர்கள் இதை நாடாளுமன்றம் பரிசீலிக்கும் முன்னரே ஏன் நீதிமன்றத்தை நாடினர் என்பதை இந்த நீதிமன்றம் முதலாவதாக விசாரிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

“உ.பி.யில் இனி மாஃபியா அச்சுறுத்தல் இருக்காது” - யோகி: உத்தரப் பிரதேசத்தில் எந்த ஒரு தொழில்முறை குற்றவாளியும் இனி தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த அத்தீக் அகமதுவின் மகன் ஆசாத், அவரது நண்பர் குலாம் என்கவுன்ட்டர், அதனைத் தொடர்ந்து நடந்த அட்டிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரஃப்பு கொலைகளுக்கு பின்னர் பொது நிகிழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யாநாத், இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூடான் கலவரத்தில் 185 பேர் படுகொலை; ஐ.நா. எச்சரிக்கை: சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1,800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே சூடானில் உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்தக் கலவரம் காரணமாக நிலவரம் இன்னும் மோசமடைந்துள்ளது.

இதற்கிடையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் சூடானில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரும் அமைதிப் பாதைக்கு திரும்புமாறு கோரினார். அதனைவிடுத்து மோதல் போக்கை ஊக்குவித்தால் அது நாட்டுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் மிக மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவம் - புதிய சர்ச்சை: புல்வாமாவில் கடந்த 2019-ல் துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சித் தகவல் ஒன்றை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சமீபத்தில் வெளியிட்டார்.

அதில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு, ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்யபால் மாலிக்கின் கருத்து குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், ''புல்வாமா தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கையை எடுத்தது. தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது மத்திய அரசு. சத்யபால் மாலிக் எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுபவர். தற்போது அவருக்கு வயதாகிவிட்டதால் நினைவிழந்துவிட்டார். ஏற்கெனவே, மனநல மருத்துவமனைக்குச் சென்றவர் அவர். தற்போது அங்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in