“உ.பி.யில் இனி எந்த ஒரு மாஃபியாவும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது” - முதல்வர் யோகி உறுதி
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் எந்த ஒரு தொழில்முறை குற்றவாளியும் இனி தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஆடை பூங்காக்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் யோகி ஆதித்யாநாத் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யாநாத், “இனி எந்த ஒரு மாஃபியாவும் எந்த ஒரு தொழிலதிபரையும் தொலைபேசியில் மிரட்ட முடியாது.
அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த 2012-17 காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்தன. ஆனால், 2017 முதல் இதுவரை (யோகி ஆதித்யாநாத் முதல்வராக இருக்கும் காலம்) ஒரு கலவரம் கூட நிகழவில்லை. ஓர் ஊரடங்கும் பிறப்பிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் நிகழ்ந்ததுபோன்ற சம்பவங்கள் இனி எழாது. இதன் காரணமாக மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்ற சூழல் உருவாக்கப்பட்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ராஜூ பால் கடந்த 2005-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அவரது கொலையை நேரில் பார்த்த சாட்சியான வழக்கறிஞரான உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் தொடர்புடைய அத்தீக் அகமதுவின் மகன் ஆசாத்தும், அவரது நண்பர் குலாமும் கடந்த 13-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு காவல் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு நாட்களில் அதாவது ஏப்ரல் 15-ம் தேதி அட்டிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரஃப்பும் மூன்று பேரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய கொலைகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும், வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு பொது நிகிழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யாநாத், அதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
