Published : 16 Apr 2023 07:01 AM
Last Updated : 16 Apr 2023 07:01 AM

1,771 பேருந்துகள் கொள்முதல் - டெண்டர் கோர நாளை கடைசி

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர நாளை (ஏப்.17) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர் சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 402 பேருந்துகள், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 347, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு 303, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு 115, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு 303, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 251, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்துக்கு 50 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

இதுதொடர்பான விவரங்கள் www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த மென்பொருள்: பழைய பேருந்துகளோடு ஒப்பிடும்போது இந்த பேருந்துகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஏறி, இறங்க மூன்று படிகள் உள்ள நிலையில் இவற்றில் 2 படிகள், பேருந்துகளை முழுமையாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகளோடு புதிய பேருந்துகள் வர உள்ளன.

பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நீதிமன்றத்தில் டெண்டருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால், டெண்டர் கோருவதற்கான அவகாசம் கடந்த டிச.5-ம் தேதியில் இருந்து படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.

தற்போது இறுதி வாய்ப்பாக ஏப்.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x